இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்....

Tuesday, April 20, 2010

"யே ச்சீ வைடி போன" என்று கோபமாக கத்திக்கொண்டே வராண்டாவில் இருந்து அறைக்குள் நுழைந்தேன்.

"என்ன பாஸு ரொம்ப கோபமா வரிங்க போல?" - நக்கலாக கேட்டான் நண்பன்.

யார் மீதோ இருந்த எரிச்சல் இப்போது அவன் மீதும் எனக்கு வந்தது. ஆனாலும் யாரையும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இவன் என் நண்பன், படிக்கும் போதும் சரி வேலைக்கு சேரும் போதும் சரி, ஒரே அறையில் இவனை கட்டித்தான் நான் மாரடிக்க வேண்டும் என்று கடவுள் எழுதிவிட்டார் போலும். இன்னொரு யார் வந்து, அவள். நான் காதலித்து தொலைந்தவள்.

"பாஸு என்ன விஷயம் பாஸு? சொல்லுங்க.." - சொல்லாமல் என்னை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்பதுபோல் கேட்டான்.

"ஒரே வெறுப்பா இருக்கு பாஸு"

"என்ன பாஸு ஆச்சு?" - அடுத்தவன் கதைய தெரிஞ்சுக்கிரதுல அவ்வளவு ஆனந்தம்.

"காதல்னு சொல்லிட்டு திரியுற வரைக்கும் சந்தோசமா தான் இருக்காளுக பாஸு. ஆனா கல்யாணம்னு பேச ஆரம்பிச்சா எப்படி பேய் பிடிக்குதுன்னு தெரியுமா?"- விரக்தியும் கோபமும் கலந்து நான் புலம்ப ஆரம்பித்தேன்.

"ஏன் பாஸு? நேத்து கூட நல்லாத்தான பேசிக்கிட்டு இருந்திங்க?"

"இப்போ வரைக்கும் கூட நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தோம்டா. அவங்க வீட்ல மாப்ள பாக்குறதா சொன்னா. அதுக்கு பெறகு தான் சண்டையே ஆரம்பம்"

"இப்போ என்ன கல்யாணம் நிச்சயமா ஆகிருச்சி? மெதுவா உங்க மேட்டர வீட்ல சொல்லவேண்டியது தான?"

"அவளுக்கு பயமா இருக்காம்". சொல்லிக்கொண்டிருக்கும் போதே போன் ஒலித்தது. அவள் தான்.

"ம் சொல்லு"

"..."

"இனிமேல் உன்கிட்ட பேசுனா என்ன செருப்பால அடி. இனிமேல் என்ன தொல்ல பண்ணாத. பேசாம போன வச்சுடு"

என்ன பேசியிருப்போம் என்ற கேள்வியோடு என்னை பார்த்தான் அவன்.

"என்ன கன்வின்ஸ் பண்றாளாம். அதாவது நாங்க கல்யாணம் பண்ணுனா நாங்க மட்டும் தான் சந்தோசமா இருப்போமாம். எங்க அம்மா அப்பாலாம் மனசு ஒடஞ்சு போயிடுவாங்களாம். அதே அவங்க சொல்ற ஆளா கல்யாணம் பண்ணுனா நாங்க மட்டும் தான் கொஞ்ச நாள் கஷ்டப்படனுமாம். மத்த எல்லாரும் நல்ல இருக்குறதுக்காக நாம கஷ்டப்படுறதுல என்ன தப்புன்னு கேக்குறா?"

"நீ போன வாரம் விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு அவள கூட்டிட்டு போனதுக்கு இன்னைக்கு இப்டி ரியாக்சன் வருதா?"

அவன் சீரியசா பேசுறானா இல்ல நக்கலடிக்குறானா என்று தெரியவில்லை. அவனை மறந்து, நான் என் வாழ்கையை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். இந்த பெண்கள் தான் எவ்வளவு மோசமானவர்கள்? சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள் என்று எல்லா வார்த்தைகளும் அவர்களுக்காகவே படைக்கப்பட்டனவா?

வீட்டில் பார்ப்பவனை தான் கல்யாணம் செய்துகொள்வாளாம். அப்பறம் என்ன மயித்துக்கு என்ன லவ் பண்ணுனா? அவளை கண்டமானைக்கு வைதுகொண்டே தூங்கிவிட்டேன்.

இன்று அவளிடம் இருந்து போன் வரவே இல்லை. எஸ்எம்எஸ் அனுப்பாமல் எரிச்சலாய் இருந்தது. இந்த போன் தான் நம்மை எவ்வளவு அடிமை ஆக்கி விட்டது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவளுக்கு மட்டும் இனி ஒரு எஸ்எம்எஸ்ஸோ காலோ செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கடைசியில் வேறு வழி இல்லாமல் போனில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டேன். என்ன செய்தும் முடியவில்லை. ஆபீஸ் போனில் இருந்து அவளுக்கு ஒரு மிஸ்டு கால் குடுத்தேன். நண்பனிடம் இருந்து இரண்டு முறை போன் வந்தது. வீட்டில் இருந்து ஒரு முறை வந்தது. எதையும் ஏற்கவில்லை. மாலை அறைக்கு வந்தேன்.

"என்ன பாஸு ரெண்டு தடவ போன் பண்ணுனேன், அட்டன்ட் பண்ணவே இல்ல?"

"கொஞ்சம் வேல இருந்ததுடா"

"பொதுவா உனக்கு போன் பண்ணுனா 'உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது'னு ஒரு பாட்டு பாடும், இன்னைக்கு ஒன்னும் வரலையே, தூக்கிட்டியா?" - இன்றும் என்னை புலம்ப வைப்பது என்ற வெறியோடு கிளம்பியிருப்பான் என்று நினைக்கிறேன்.

"அவளே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், பெறகு அந்த பாட்டு மட்டும் எதுக்கு?"

"மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல, அவ ரொம்ப நல்ல பொண்ணுன்னு நீ தான சொல்லிருக்க? அவ உன் லைப்ல பொக்கிஷம்னு நீ தான சொன்ன? இப்போ ஏன் இப்டி பேசுற?"

"யாருடா நல்ல பொண்ணு? அவளா? ஊர் சுத்துறதுக்கும், படம் பாக்குறதுக்கும், எதாவது பிரச்சனைனா போன் பண்ணி அழுகுறதுக்கும், அவளுக்கு பரிச்சைனா என்ன தூங்க விடாம டவுட் கேக்குறதுக்கும் நான் தேவ. ஆனா கல்யாணம் பண்றதுக்கு மட்டும் நான் தேவ இல்லையா?"

"டேய் பொண்ணுங்க சொசைட்டிக்கு ரொம்ப பயப்படுவாங்கடா. படிச்சவளோ படிக்காதவளோ எவளா இருந்தாலும் இந்த சமூகத்துக்கு பயப்படுவா பாஸு. உன்ன கல்யாணம் பண்ணி, நாளைக்கே அவ குடும்பமும் உன்ன ஏத்துக்கிட்டாலும் இந்த ஊர் தப்பா தான பேசும்னு அவ பயப்படுவா"

"கரக்ட்டு தான் பாஸு. இந்த சொசைட்டி இருக்குறனாலதான் அவளுக ஒருத்தன் கூட மட்டும் அடக்கிட்டு வாழுறாளுக. இல்லேனா புருசனையும் கலட்டி விட்டுட்டு வேற யார்கூட வேணும்னாலும் போயிடுவாளுக. காதல் விசயத்துல நமக்கு எதிரா இருக்குற அதே சொசைட்டி கல்யாணத்துக்கு அப்பறம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கு?"

"பாஸு ஏன் இப்டி குதர்க்கமா யோசிக்குறீங்க?"

"பெண் கல்வி, பெண் விடுதலைன்னு பேசுறவன எல்லாம் நிக்க வச்சு சுடனும். அவளுக வீட்டுக்குள்ள இருக்கும் போது ஒழுங்கா தான் இருந்தாளுக. என்னைக்கு வெளிய வந்து படிப்பு வேலைனு இறங்குனாளுகளோ அன்னைக்கே கெட்டு நாசமா போயிட்டாளுக."

"டேய் அவள பத்தி பேசும் போது அவள பத்தி மட்டும் பேசுடா. எதுக்கு எல்லா பொம்பளைகளையும் வம்புக்கு இழுக்குற?"

"உனக்கு ஏன்டா கோவம் வருது? நீ எவளையும் லவ் கிவ் பண்ணி தொலைக்குரியா? வேண்டாம்டா. என்ன பாத்தாவது திருந்து."

"ஹி ஹி அப்டிலாம் ஒன்னும் இல்ல. பொதுவா சொன்னேன்"

"முன்னாடிலாம் அவ என்ட மட்டும் தான் பேசுவா. அவ கஷ்டத்தலாம் என்ட சொல்லித்தான் அழுவா. அடிக்கடி சொல்லுவா, நான் காட்டுற மாதிரி பாசத்த வேற யாரும் இந்த உலகத்துல அவ மேல காட்ட முடியாதுன்னு. இப்போ அவளோட எல்லா பிரச்சனையும் தீந்து போயிடுச்சி. இப்போ அவ கஷ்டத்த சொல்றதுக்கு ஆள் தேவ இல்ல. அதனால நான் தேவ இல்ல. இப்போ ஏதோ பார்ட் டைம் வேலைக்கு வேற போறா. அங்க எவனோ இவளுக்கு பிரண்டாம். அவன் அவ்வளவு ஜாலிய பேசுவானாம். என்கிட்டயே சொல்றா பாஸு. என்னால அப்டிலாம் ஜாலிய பேச முடியாதுல்ல அதான் என்ன விட்டுட்டு போயிட்டா"

"அவ மேல சந்தேகபடுறியா பாஸு?"

"அப்படியும் வச்சுக்கலாம். சரி, அவள பத்தி பேசி எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு? நான் தூங்கப்போறேன்"

ஒரு இரண்டு நாள் கொஞ்சம் போர் அடித்தது. யாரிடம் இருந்தும் எனக்கு போன் வரவில்லை. சும்மா ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த போது தான் தெரிந்தது எனது கான்டேக்ட் லிஸ்ட்டில் 300 பேர் இருக்கிறார்கள் என்று.. இத்தனை பேரையும் இழந்து நான் அவளிடம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது யாரிடமும் பேசாமல் எதற்கு போன் என்றும் தோன்றியது. போகப்போக எல்லாம் பழகிவிட்டது. நண்பன் மட்டும் எப்போதாவது கேட்பான், அவளிடம் இருந்து போன் வந்ததா என்று. இப்போது அவனும் கேட்பது இல்லை.

நண்பர்களிடம் எல்லாம், 'இப்போ தாண்டா நிம்மதியா இருக்கேன். 'good morning', 'sweet dreams', 'had ur lunch?' 'had ur breakfast?' லொட்டு லொசுக்குனு எதுவும் அனுப்ப தேவ இல்ல. மிஸ்டு கால் வந்ததும் பதறி அடிச்சு போன் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. எத பத்தியும் கவலை இல்லாம சந்தோசமா இருக்கேன்' என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு ஞாயிற்று கிழமை, மிகவும் போர் அடித்துக்கொண்டிருந்தது. அருகில் இருக்கும் ப்ரொவ்சிங் சென்டருக்கு சென்றேன். மெயில்களை பார்த்த எனக்கு அதிர்ச்சி. அவளிடம் இருந்து வழக்கமான ஓட்டை ஆங்கிலத்தில் ஒரு ஈமெயில் வந்திருந்தது.
"y ram? y v depart? without understanding u nd ur situation even a single sec z my great mistake......sorry ram...... now internal z going on...... im missing ur care on me.......im extremely sorry ram......still now im missing ur care,pasam everything.....anyway im extremely sorry ......sorry ram..... still 2day i dont want 2 loose my ego,dignity.....i left all nd typing 4 u........sorry 4 my hurting.....extremely sorry" - என்றிருந்தது.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சந்தோசமா வருத்தமா குழப்பமா எது என்று புரியவில்லை.. அதைப் படித்ததும் ஒரு மாதிரியாக இருந்தது.

அறைக்கு வந்து நண்பனிடம் விஷயத்தை சொன்னேன்.

'நீ என்ன ரிப்ளை அனுப்புன?" - பெண்களை விட ஆண்கள் அழகாக புரணி பேசுவார்கள் என்பதை இவன் போன்ற நண்பர்கள் தான் உணர்த்துகிறார்கள்.

ஒன்றும் சொல்லாமல் அவனை பார்த்தேன்.

"கரக்ட்டு தான். அவ உன்ன எவ்வளவு பாடு படுத்தியிருக்கா? அவளுக்கு போய் ரிப்ளை அனுப்பிக்கிட்டு. அவாளாம் வருங்காலத்துல நல்ல அனுபவிப்பாடா. 'ஐயோ இவன மிஸ் பண்ணிட்டோமேன்னு' ஏங்குவாடா"

எனக்கு கோவம் வந்து விட்டது.. "டேய் இப்போ ஏன்டா அவளுக்கு சாபம் விடுற? அவ என்னடா தப்பு பண்ணுனா? ஏதோ நான் தான் கோபத்துல அவாட்ட தப்பா பேசிட்டேன். ஆனா, இப்போ அவ வந்து என்ட மன்னிப்பு கேக்குறாடா. அவளைப்போய் இப்டி பேசுற? பாவம் அவளுக்கு அன்னைக்கு என்ன பிரச்சனையோ, என்கிட்டே கொஞ்சம் கோபமா பேசிட்டா, அதுக்கு நானே வருத்தப்படல, உனக்கு என்னடா இவ்வளவு கோபம் அவ மேல? அவளும் ஒரு பொம்பள தான?" என்று சொல்லிக்கொண்டே என் போனில் இருந்து அவளுக்கு கால் செய்தேன்.

"டேய் ஐயம் சாரிமா. its my mistake, நான் தான் உன்ன புரிஞ்சுக்கல..........." என்று பேசிக்கொண்டே வராண்டாவிற்கு சென்றேன். நண்பன் பித்துப்பிடித்தவனைப்போல் என்னை பார்த்துக்கொண்டிருந்தான். நான் மெதுவாக பக்கத்தில் இருக்கும் செல் போன் கடைக்கு ”உனக்காக தானே இந்த உயிர் உள்ளது” காலர்டோன் வைப்பதற்கு சென்றுகொண்டிருந்தேன்.

அவள் பெயர் தெரியாது!!! வயது 35 வெள்ளை நிறம்..

Wednesday, April 14, 2010

இன்று வேலை விஷயமாக எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு சென்றேன். படிக்கும் காலத்திலும் சரி, வேலைக்கு வந்துவிட்ட பிறகும் சரி, இந்த பெண்கள் கல்லூரியில் தான் பல நேரம் செலவிட்டிருக்கிறேன். படிக்கும் பொது கல்லூரிக்கு வெளியே, இப்போது கல்லூரிக்கு உள்ளே. பயந்து பயந்து, படிக்கும் காலத்தில் சைட் அடித்த கிக் இப்போது நேருக்கு நேராக அவர்களை கல்லூரிக்குள்ளேயே பார்க்கும் போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கல்லூரியின் கட்டிட மேற்பார்வையாளரிடம் பேசிவிட்டு, நிர்வாக அலுவலகத்தின் முதல் தளத்தில் இருக்கும் அவர் அறையை விட்டு வெளியேறி கீழிறங்கி வருகிறேன். அடுப்பில் இருந்து கங்கை கொட்டுவது போல் வெயில் வாட்டிக்கொண்டிருந்தது. கல்லூரியின் முக்கிய வாயிலை அடையும் பாதையில் சென்றுகொண்டிருக்கும் போது தான் அவரை (அவளை) பார்த்தேன்.

'இவா இங்க தான் இப்போ வேல செயராளா?' என்று எண்ணிக்கொண்டே ஆச்சரியமாக பார்த்தேன். நடந்து செல்லும் போது அவளும் என்னை பார்த்தாள். கடந்து சென்றாள். அவளுக்கு என்னை தெரியாது; ஆனால் எனக்கும், கல்லூரி நாட்களில் எங்கள் பாட்ச்சில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் எப்போதும் அவளை மறக்க முடியாது. 'மறக்கக்கூடிய பிகராடா அது?' என்று மனதில் ஒரு பெருமூச்சுடன் எண்ணிக்கொண்டேன்.

என் நினைவுகள் இப்போது 2004ம் ஆண்டிற்கு சென்றது. நான் கல்லூரி வாழ்வில் அடி எடுத்து வைத்த வருடம் அது. எங்கள் கல்லூரி சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. மாணவர்களிடம் "பால்வாடி" என்னும் செல்லப்பெயரையும் பெற்றிருந்தது. காரணம் மிகுதியான கணடிப்பு. பெயருக்கு கூட ஒரு பெண் கிடையாது. துப்புரவு பணியாளர் முதல் அனைவரும் ஆண்களே. முதல் ஆறு மாதங்கள் கவலைக்கிடமாகவே சென்றன. ஆசிரியரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னால் தண்டிக்கும் ஒரே கல்லூரி, நான் படித்த கல்லூரி தான்.

இப்படி வறட்சியாக சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் தான் அந்த தேன் வந்து பாயும் செய்தி எங்கள் காதில் விழுந்தது. கல்லூரி அலுவலகத்தில் அடிக்கடி சில பெண்களின் தலைகள் தென்பட்டன. என்ன ஏது என்று விசாரித்த பொது, அடுத்த ஆண்டு முதல் எங்கள் கல்லூரியில் மாணவிகளையும் சேர்க்க இருக்கிறார்கள், அதனால் பெண் விரிவுரையாளர்களை வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற தகவல் வந்தது.இத கேட்டவுடன் அவனவனுக்கு தலைகால் புரியவில்லை. பெல்ட் என்றாலோ, ஷூ என்றாலோ என்னவென்றே தெரியாமல் இருந்தவனும், பிராண்டட் ஷூவும், சட்டைகளும் அணிந்து வர ஆரம்பித்து விட்டான். சில ஆசிரியர்கள் தான் மிகவும் காமெடி பீசாக வந்தார்கள் - டக் இன் என்ற பெயரில் நெஞ்சில் பாண்ட்டை மாட்டுவது, ஓட்டை ஆங்கிலத்தில் வகுப்பில் பேசிப்பழகுவது என்று பட்டப்பெயர் வைப்பதற்கு ஏதுவாக பல செயல்களில் வெறிகொண்டு இறங்கினார்கள்.

இந்த நிலையில் தான் தாவரவியல் துறைக்கு அவள் விரிவுரையாளராக வந்தாள். கல்லூரி காலத்தில் நாம் யாருக்கு தான் மரியாதை கொடுத்தோம்? அப்பாவையே "எங்க அப்பன்" என்று பேசி தான் நண்பனிடம் கெத்து காட்டுவோம்; இதில் ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? சரி அவளை பற்றி சொல்லிவிடுகிறேன். அவளுக்கு 25ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கும். எங்கள் ஊரில் எவனும் இப்படிப்பட்ட கலரில் ஒரு பெண்ணை பார்த்திருக்க மாட்டான். அம்புட்டும் கரிச்சட்டி மாதிரி தான் இருக்கும். ஆனால் இவள் முகத்தில் பாலை கொட்டினால் பாலுக்கும் இவள் கலருக்கும் வித்தியாசம் தெரியாது. இவள் கழுத்தில் தெரியும் பச்சை நெரம்பு எந்த ஆணையும் சுண்டி இழுக்கும். எப்பொழுதும் அடர் நிறங்களிலேயே ஆடை அணிந்து வருவாள். முட்டை வடிவில் சற்றே சதைப்பற்றான முகம், மூக்கின் வலது புறத்தில் உத்து கவனித்தால் மட்டுமே தெரியும் அளவிற்கு ஒரு மூக்குத்தி, கொழுக்மொளுக் என்ற தேகம் - இது தான் அவள். அவள் ஒரு கையில் எதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் பேனாவை பிடித்துக்கொண்டு அந்த கையை குறுக்காக வீசி அகலமான எட்டு வைத்து காலை விரித்துக்கொண்டே தான் நடந்து வருவாள். அவளின் நடை அவளுக்கு பலவிதமான பட்டபெயர்களை பெற்று தந்தது. சேலையின் எந்த பாகமும் தோள் பகுதியை தாண்டி இருக்காது. இதனாலேயே அவளுக்கு இடது புறம் தான் பலரும் திரிவோம்.

"டேய் மாப்ள, அவ திருச்சிகாரியாம்டா.."

"போடா வெளக்கென்ன, அவள பாத்தா நாகர்கோயில் ஆளு மாதிரி இருக்கா.. ஆளும் நல்ல அமைதியானவளா இருக்காடா."

"டேய் அவ எந்த ஊர்காரியா இருந்தாலும் நம்ம கண்ணு மூடப்போரதில்ல. பொறவு என்ன? மூடிட்டு சைட் மட்டும் அடிங்கடா" ஒரு சீனியர் மாணவனின் அறிவுரை ஏற்பதாக இருந்தது.

ஆனால் நாங்கள் நினைத்தது போல் அவள் இல்லை. வகுப்பில் அவள் யாரிடமாவது கேள்வி கேட்கும் போது சுட்டு விரலை நீட்டாமல் நாடு விரலை நீட்டி "நீ சொல்லு" என்பாள். யாருக்கும் பதில் தெரியவில்லை என்றால் "நீங்க எல்லாவனும் வேஸ்ட், ஒருத்தனுக்கும் ஒன்னு கூட தெரியலையா?' என்று நடுவிரலை உயர்த்திக்காட்டி நக்கலாக சொல்லுவாள். பாடம் நடத்தும் போது மட்டும் தான் அவள் கெடுபிடியாக இருப்பாள். சாதாரணமான நேரங்களில், மிகவும் உரிமையோடு மாணவர்களிடம் நடந்துகொள்வாள். நாங்களும் அவளையே சுற்றி சுற்றி வந்து அவளிடம் வறுத்து தள்ளிக்கொண்டு இருப்போம். "இப்போ எல்லாம் வருவிங்கடா. அடுத்த செமெஸ்டர்ல இருந்து நீங்க கண்டுக்கவே மாட்டேங்க. உங்க கிளாஸ்லையே ஏகப்பட்ட பொண்ணுங்க வந்துரும் கடலை போட" என்று அவள் கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவாள். அப்போதெல்லாம் "அப்படியெல்லாம் சொல்லாதீங்க மேடம், எங்களுக்கு நீங்க தான் குட் பிரண்ட்" என்று வலிந்துகொண்டிருப்போம்.

அன்றும் வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் அவளைப்பற்றி கமென்ட் அடித்துக்கொண்டிருந்தோம். அவளுக்கு வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மிகவும் அசிங்கமான கெட்டவார்த்தை ஒன்றை பட்டப்பெயராக வைத்திருந்தோம். அந்தப்பெயரை இப்போது நினைத்தாலும் மனதிற்குள் ஒரு கிளர்ச்சியும் சிலிர்ப்பும் சிரிப்பும் பொங்கும். கல்லூரி நாட்களில் தான் நாம் எவ்வளவு சந்தோசமாக சிரித்துக்கொண்டிருப்போம்? ஆனால் அந்த சிரிப்பு யாரோ ஒருவரை தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்திய சிரிப்பாகத்தான் இருக்கும். அன்றும் அப்படித்தான் பேசி சிரித்துக்கொண்டிருந்தோம்.

"மாப்ள கல்யாணம் பண்ணுனா அவள மாதிரி ஒரு பிகர கல்யாணம் பண்ணனும்டா.."

"ஏன்டா, அவளையே பண்ண வேண்டியது தான?"

"இவளையா? என்ன என்ன செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட சொல்லுறியா?"

"என்னது செகண்ட் இன்னிங்ஸா? மொத இன்னிங்க்ஸ் எவன்டா? நம்ம கட்டக்காலனா (ஹாஸ்டல் சப் வார்டன்)?"

"டேய் நான் சீரியஸா பேசுறேன்."

"ஓ.. அப்போ அவ வந்தா வேண்டாம்னு சொல்லுருவ?"

"டேய் அவ பவம் டா. அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு. டிவர்சும் ஆகிருச்சு"

"உனக்கு எவன்டா சொன்னது? பாத்தா அப்படி தெரியலையே"

"நேத்து பேசிட்டு இருக்கும் போது அவ தான் சொன்னா."

"பாருடா இவன் கூட தான் நாமளும் சுத்துறோம். நம்மகிட்ட சொல்லாம இவன்ட மட்டும் சொல்லுறானா என்ன அர்த்தம்? இவன வசதிக்கு இல்லேனாலும் அசதிக்கு..."

"டேய் இவன அப்பறம் ஓட்டலாம். மொத அவ கதைய மொத கேப்போம். நீ சொல்லுடா மாப்ள"

"அவளுக்கு கோயில்பட்டி பக்கமாம்டா. 20 வயசுலேயே கல்யாணம் ஆகிருச்சாம். அவ புருஷன் ஒரு தீப்பட்டி ஆபிஸ்ல சூப்பர்வைசரா இருந்தானாம். ஒரு ஆக்சிடண்ட்ல செத்துப்போயிட்டானாம். கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே புருஷன் செத்துப்போயிட்டதால இவள இவங்க அம்மா வீட்டுக்கே அனுப்பிட்டாங்களாம்"

"நாங்க ரியாக்சன் எல்லாம் குடுக்க மாட்டோம்; கதைய மட்டும் சொல்லு"

"அதுக்கு அப்பறம் படிச்சு M.Phil முடிச்சு இங்க வந்துருக்கா"

"கடவுள் நம்ம கண்ணுல இவள சிக்க வைக்கக்குடாதுன்னு நினைச்சுருக்கார். ஆனா விதிய பாத்தியா? என்னென்னமோ சதி பண்ணி நம்ம கண்ணுக்கு விருந்து குடுத்துருச்சு"

"ச்சே ஏன்டா இப்படி பேசுறிங்க? அவள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா?"

"சொல்லிட்டாருயா கலக்டரு. சரி விடு, வேற எதுவும் சொன்னாளா?"

"நான் தான் 'நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு' கேட்டேன்"

"உன்ன கட்டிக்குறேன்னு சொல்லிட்டாளாடா?"

"அவ வீட்ட மீறி அவ எதுவும் செய்ய முடியாதாம். வீட்ல பாத்து பண்ணி வச்ச தான் உண்டாம். அண்ணா அவங்க பண்ணமாட்டாங்களாம்"

அவளுக்கு சீன் பார்த்துக்கொண்டே இரண்டாவது செமேஸ்டேரையும் முடித்துவிட்டோம். இரண்டாம் ஆண்டு கல்லூரி வண்ணமயமாக காட்சி தந்தது. வெல்கம் பார்ட்டி வைத்து ஓரளவு ஜூனியர் பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டோம். "அண்ணா" என்று எவளாவது சொன்னால், 'நான் ஒன்னும் உனக்கு ப்ரொபோஸ் பண்ணிட மாட்டேன். அதனால அண்ணான்னு கூப்பிட்டு அசிங்க படுத்தாத' என்று விவரமாக சமாளித்து அந்த உறவுச்சொல்லை தவிர்த்துவிடுவோம். அவனவன் கடலை, பிக்கப், லவ் என்று திரிந்து கொண்டிருந்த நிலையில் நாங்கள் எப்படி அந்த கோவில்பட்டிக்காரியை நினைத்துக்கொண்டிருக்க முடியும்? சென்ற வருடம் இருந்த மார்க்கெட் அவளுக்கு இப்போது இல்லை. அதே போல் அவளும் எங்களிடமோ, மற்ற பெண்களிடமோ பேசுவதில்லை. பாடம் நடத்துவதிலும் முன்புபோல் சுருசுருப்போ விறுவிறுப்போ இல்லை.

இப்படி எங்கள் வாழ்வு வலமாக போய்க்கொண்டிருந்த நிலையில் தான் ஒரு வதந்தி பரவியது. அது, அந்த கோவில்பட்டிக்காரியும் எங்கள் துறையில் உள்ள ஒரு விரிவுரையாளரும் காதலிக்கிறார்கள் என்பது. இந்த வதந்தி உண்மை என்பது போல் தான் பல நம்பககரமான இடங்களில் இருந்து செய்திகள் வந்தன.
'நேத்து கூட பாத்தேன் மாப்ள, சாந்தரம் ஆறுமணி வரைக்கும் கிளாஸ்ல உக்காந்து அவன் அவாட்ட கடலை போட்டுட்டு இருந்தான்டா', ' லாப்லையும் இது தான் டா நடக்குது. நாங்க செடிய நோண்டிக்கிட்டு இருக்கும் போது அவன் அவள நோண்டிக்கிட்டு இருக்கான்டா' என்று பல விதமான செய்திகள். அவளுக்கு 'எச்சி இலை' என்று இந்த காலகட்டத்தில் பெயர் மாற்றினோம். அவள் விஷயம் எங்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் அவனை மிரட்டி வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள்.

அந்த நிகழ்விற்கு பிறகு இவளும் ஒரு வாரத்திற்கு கல்லூரிக்கு வரவில்லை. பின்புவந்த அவளிடம் பலவிதமான மாற்றங்கள். யாரிடமும் சரியாக பேசுவதில்லை. ஆடைகளும் கொஞ்சம் தாறுமாறாக கட்டிவர ஆரம்பித்தால். இடை தெரியும் என்பதாலேயே மாணவிகளுக்கு சேலை அணியும் சுதந்திரம் இல்லை எங்கள் கல்லூரியில். ஆனால் பெண் விரிவுரையாளர்கள் சேலை மட்டுமே அணிந்து வரவேண்டும் ஒருசில நிபந்தனைகளுடன். இவள் இப்போதெல்லாம் இடையை அகலாமாக காட்டும் விதமாகவே சேலை அணிந்து வந்தாள். மெல்லிய புகைச்சல் கிளம்பியது. ஒரு நாள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்து புகைச்சலை மேலும் கிண்டி எரிய வைத்தாள். மாணவர்கள் யாராவது பாடத்தில் சந்தேகம் கேட்க துறைக்கு சென்றால், 'நான் இந்த மாதிரி டிரஸ் போட்டு வந்தா தான் என்கிட்டே பேசுவிங்களா?' என்று கேட்டிருக்கிறாள்.

ஒரு நாள் அவள் சிகப்பு நிற சேலை லோஹிப்பாக அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு வந்தாள். வகுப்பில் அவள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது கல்லூரி முதல்வரும் இயக்குனரும் வந்தனர்.

"மேடம் டிபார்ட்மென்ட் வாங்க உங்ககிட்ட பேசணும்"

"இல்ல எனக்கு சிலபஸ் முடிக்கணும், இங்கவே சொல்லுங்க"

"நீங்க நடத்துனதேல்லாம் போதும், இனி உங்களுக்கு இங்க வேல இல்ல, நீங்க கிளம்பலாம்"

"நான் எதுக்கு சார் போகணும்"

"என்னடி கத்துற? பசங்களுக்கு பாடம் சொல்லிக்குடுக்க வரமாதிரியா நீ வர? ஏதோ அவுசாரி மாதிரில வர." கல்லூரி முதல்வரும் அவளும் பேசிக்கொண்டிருக்கும் போது இயக்குனர் கத்திவிட்டார்.

அந்த வார்த்தையை கேட்ட உடன் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டன. கலங்கிய கண்களுடன், நாங்கள் இதை கவனிக்கிறோமா என்று பார்த்தாள். நாங்கள் ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்தோம்.

"நான் கண்ணன கல்யாணம் பண்ணி ஒழுங்கா இருந்திருப்பேன். நீங்க அவர வெளிய அனுப்புனனாலதான் இன்னைக்கு இப்படி நிக்குறேன்"

பேச வந்த முதல்வரை இயக்குனர் தடுத்து "நாங்க என்ன காலேஜ் கட்டி வச்சுருக்கோமா இல்ல மாமா வேல பாத்துட்டு இருக்க லாட்ஜ் கட்டிருக்கோமா?. முண்ட, பண்ணுறதையும் பண்ணிட்டு இப்போ வக்கனையா பேசுறத பாரு சனியன்" என்று கூறிக்கொண்டே அவள் முடியைப்பிடித்து தரதரவென்று இழுத்து தள்ளிவிட்டார். அவள் திரும்ப வரவே இல்லை. ஒரு வாரத்திற்கு கல்லூரி முழுவதும் எங்கள் வகுப்பு மாணவர்களிடம் நடந்தவற்றை தெளிவாக விசாரித்துக்கொண்டிருந்தார்கள். நாங்களும் 'நல்ல பிகர்' போச்சே என்ற துக்கத்தில் சில நாட்கள் இருந்தோம். மீண்டும் சக மாணவிகள் ஆசிரியைகள் என்று கடமையை செவ்வனே செய்தோம்.

படிப்பு முடிந்து இதோ இப்போது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து அவளை அவளை எங்கள் ஊரில் அதுவும் ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராக பார்ப்பேன் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. இப்போதும் அதே பழைய குறுகுறுப்புடன் அவள் இடையை பார்த்தேன். ஒழுங்காக சேலை கட்டியிருந்தாள். நடையில் மிகுந்த நிதானமும் மென்மையும் தெரிந்தன. என்னைக்கடந்து சென்றுவிட்டாள்.

எவ்வளவு யோசித்தும் எனக்கு அவள் பெயர் ஞாபகம் வரவில்லை. அவள் பட்டபெயர் மாட்டும் ஞாபகம் வந்தது. ஏனோ, அந்த பெயர் இப்போது ஞாபகம் வந்ததற்கு மனம் வருத்தமாக இருந்தது. இனிமேல் அந்த கல்லூரிக்கு வேரயாரையாவது அனுப்பிவிட வேண்டும் என்று முடிவுசெய்து குற்ற உணர்வோடு வெளியேறினேன்.


சா.நி.யின் விமர்சனம் ஒரு சாணி....

Monday, April 5, 2010

அங்காடி தெரு படம் முதலில் பார்த்த பொது ஒரு மெல்லிய கணம் மனதை ஆட்கொண்டது. இரண்டாம் முறை பார்த்தது முதல் ஒரு இனம் புரியாத சோகம் மனதை அறுக்கின்றது. இந்த சூழ்நிலையில் தான் நமது சாருநிவேதிதாவின் (சுருக்கமாக சா.நி.) விமர்சனம் அந்த படத்திற்கு எப்படி இருக்கிறது என்ற ஆர்வத்தில் பார்த்தேன். அவர் தான் இந்த மாதிரி நல்ல படங்கள் வந்தால் நல்லவராக இருக்க மாட்டரே! ('அவர் எந்த படத்துக்கு தான் ஒழுங்கா விமர்சனம் எழுதுனார்?' என்று மட்டும் கேட்காதீர்கள்).

சரி, விமர்சனம் என்றால் மூடிக்கொண்டு அதை மட்டும் எழுத வேண்டும். அதை விட்டுவிட்டு 'வசந்த பாலனிடம் நான் ஹீரோ வாய்ப்பு கேட்டேன்", "அவர் என் நண்பர்", "என் புத்தக வெளியீட்டிற்கு வந்தார்", என்றெல்லாம் சப்பை கட்டு கட்டிவிட்டு விமர்சனத்தை ஆரம்பிக்கிறார்!! எதற்கு இந்த நடிப்பு? நான் ஒரு யோக்கியன், மனதில் பட்டதை மறைக்க தெரியாது என்று ஒரு பில்ட்டப் வேறு.. ஒரு வேலை வசந்த பாலன் தன் அடுத்த படத்தில் இவரை ஹீரோவாக போடுவார் என்ற நப்பாசையிலா? அவர் பிட்டு படம் எடுக்க மாட்டரே? சொல்ல முடியாது, இவர் நட்பை துண்டிக்காவிட்டால் அவர் பிட்டு படமும் எடுத்துவிடுவார். அங்காடி தெரு படம் வக்கிரமாக இருக்கிறதாம். இவர் தன் கதையில் விவரித்த ஓரின உறவை விட இந்த உலகில் எதுவும் வக்கிரமில்லை. அதை படித்த பின் இரண்டு நாட்களுக்கு என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை. சரி அவரின் 'உலகத்தரமான' (கமலை போல் இவருக்கும் ஒரு பேராசை உண்டு, உலகத்தரம் தனக்கு மட்டுமே உரியது என்று. மற்றவை எல்லாம் டம்மி பீசு என்பார்) விமர்சனத்தை அலசுவோம்.

தன் குழந்தை ஊனமாக பிறந்ததற்காக ஒரு தாய் சந்தோஷப்படும் காட்சி இவருக்கு ஆபாசமாக இருக்கிறதாம். அந்த வசனகர்த்தாவின் வக்கிரபுத்தியை இந்த காட்சி வெளிப்படுத்துகிறதாம் (ஜெயமோகன் என்ன செஞ்சா உங்களுக்கு பிடிக்கும் சா.நி.?). ஊனமுற்றவர்களை வாழ தகுதி இல்லாதவர்களாக சா.நி. பார்ப்பதால் தான் அப்படி பிறந்த ஒரு குழந்தையை இவர் மனது ஏற்கவில்லை. குப்பைத்தொட்டியில் போடும் எவ்வளவோ பெற்றோர்களுக்கு மத்தியில் அந்த தாய் எவ்வளவோ மேல்.

அடுத்ததாக அந்த தொழிலாளர்கள் சாப்பிடும் இடத்தை காட்டும் போது இவருக்கு மலக்குவியல் ஞாபகம் வந்ததாம். அந்த இடத்தை பார்த்த உடன் இவருக்கு குமட்டிக்கொண்டு வந்ததாம். வாழ்வில் என்றாவது சோற்றிற்கு கஷ்டப்பட்டிருந்தால் இவருக்கு பசியின் கொடுமையும் சோற்றின் அருமையும் தெரிந்திருக்கும். ஓசியில் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் சாப்பிடும் இவருக்கு என்ன கஷ்டம் தெரியும்? ('நான் டெல்லியில் பட்ட கஷ்டம் யாருக்கு தெரியும்?' என்று இதற்கொரு ஒப்பாரி பதிவு போடுவார் என்று எதிர் பார்க்கிறேன்) .

படம் முழுவதும் கெட்டவைகளே நடக்கிறதாம். ரயில் விபத்து, சாலை விபத்து, இன்னும் பலவாம். கதையே அது தானே? வாழ்க்கையில் நல்லவையே நடக்காத மக்களின் அன்றாட வயிற்றுப்பிழைப்பு தானே படம்? தோல்வி அடைந்தவனுக்கு வாழ்கையே இருக்க கூடாதா? அதை படமாக எடுக்க கூடாதா? எல்லோரும் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று உத்தமர்களே வாழும் இந்த உலகிற்கு வக்காலத்து வாங்குகிறார் நம் சா.நி. இந்த படத்தில்வரும் சூப்பர்வைசர் பாத்திரமும் பூ படத்தில் வரும் போர்மேன் பாத்திரமும் ஒரு துளி தான். எங்கள் ஊரில் பட்டாசு ஆலைகளில் போர்மேன்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியாதவை. அவன் நினைத்தால் தான் யாரும் அந்த தொழிற்சாலையில் வேலை செய்ய முடியும். அதற்கு அவன் ஆணிடம் இருந்து பணமாகவும், பெண்ணிடம் இருந்து சதையாகவும் கூலி பெறுவான். (இன்றும் என் அப்பா தன் வாரக்கூலியில் ஒரு பகுதியை போர்மேனுக்கு தான் லஞ்சம் கொடுக்கிறார்). சும்மா இரவு மட்டும் பப்பிலும் பைவ் ஸ்டார் ஓட்டல்களிலும் பொழுதை ஒப்பேற்றும் இவருக்கு இதைப்பற்றி என்ன தெரியும்? எந்த பெண்கள் கல்லூரியில் எந்த பிகர் ப்ரீயா இருக்கும் என்று வேண்டுமானால் தெரியும்.

அதுவும் கதாநாயகியை சாலையில் சிலர் கற்பழிக்க துரத்துவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று சாடுகிறார். அய்யா, 'நான் தான் சாமி என்று ஆசரமம் நடத்துபவனே அடுத்தவன் பொண்டாட்டிய விட்டு வைக்க மாற்றான், இதுல நடுராத்திரி தண்ணி அடிச்சுட்டு ரோட்ல சுத்துறவன அப்படி காட்டுறது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா? முதலில், 'அடுத்தவனுக்கு அறிவே இல்லை', 'எனக்கு தான் எல்லாம் தெரியும்', 'நான் தான் யோக்கியன்', 'உலக சினிமாவின் தத்துப்பிள்ளை, என்றெல்லாம் நினைப்பதை இவர் நிறுத்த வேண்டும். இது தான் இவரின் பாசிசம். வேண்டுமானால் நீங்கள் ஒரு உலகத்தரத்தில் தமிழ் படம் எடுங்கள், நாங்கள் பார்க்கிறோம்.

நான் நினைக்கிறேன், சா.நி. தனக்கு வயதாகி விட்டதை எண்ணி மிகவும் கலங்குகிறார். அதனாலேயே தனக்கு ஒவ்வாத சில விஷயங்களை பிடிப்பதாக காட்டிக்கொண்டு 'நானும் யூத்து தான்' என்று டமாரம் அடிக்கிறார். என்று ஒரு வயதானவன் தன்னைத்தானே இளைஞன் என்று சொல்கிறானோ அப்போது தான் அவனுக்கு வயதாக தொடங்குகிறது. உங்களை மற்றவர்கள் 'யூத்து' என்று சொல்லும் படி நடக்க முயலுங்கள் சா.நி. முதலில் உங்களை Jack of all trade ஆக காட்டுவதை நிறுத்துங்கள்; ஏனென்றால் உங்கள் தவறு வெட்ட வெளிச்சம் ஆகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இயக்குனர்கள் தான் இப்போது உருப்படியாக படம் எடுக்கிறார்கள். அவர்களையும் இந்த மாதிரி அசிங்கமான விமர்சனங்களால் கேவலப்படுத்துகிறார்.

இவர் ஏன் வேட்டைக்காரன், அசல், வில்லு போன்ற படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை? பசங்க, நான் கடவுள், அங்காடி தெரு போன்ற அருமையான படங்களுக்கு மட்டும் தான் இவரிடம் இருந்து விமர்சனம் வரும்; அதுவும் அந்த படங்களை குறை தான் சொல்லுவார். (பசங்க படத்தின் விமர்சனத்தில் கூட ஒரு சில இடங்களில் குறை கூறியிருப்பார்). இந்த மாதிரி படங்களை மட்டும் விமர்சனம் செய்யும் போது தானே இவருக்கும் 'மேதாவி' என்ற பட்டம் கிடைக்கும்? அதிலும் இந்த படங்களை வைது, கிழித்து, கேவலப்படுத்தும் போது தானே 'ச்சே, சாரு ரைட்டா தான்டா சொல்லுறாரு' என்று நாலு பேரை தன் பக்கம் சிங்கி தட்ட வைக்க முடியும்? இவ்வளவு நாட்களாக இவரின் வலைதளத்தை படித்ததற்காக வெட்கப்படுகிறேன்.

பின் குறிப்பு:
இவரை நம்பி ஜெயமோகனை ஒரு மோசமான எழுத்தாளராக இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறேன் (அவர் வசங்களை ரசித்த எனக்கு அவர் எழுத்தை படிக்க தோன்றவில்லை). எல்லா வற்றிற்கும் காரணம் சா.நி. தான். அவரை ஒரு அயோக்கியனாகவே சித்தரித்து விட்டார். சா.நி.யும் சினிமா வாய்ப்பிற்கு தானே இப்படி பல் இழித்து காத்திருக்கிறார், முன் எச்சரிக்கையாக வசந்தபாலனை நண்பர் என்கிறார்? எக்கேடும் கேட்டுப்போங்கள் சா.நி. ஆனால் சந்தனத்தை முகர்ந்து கூட பார்க்காமல் பீ என்று சொல்லவதை மட்டும் இன்றோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

வசந்தபாலனிடம் எனக்கும் ஒரு வருத்தம் உண்டு. அவர் வெயில், அங்காடி தெரு இரண்டு படங்களிலும் நாடார் சாதியை தாக்குவது போல் வசனமோ, காட்சியோ இடம் பெற்றிருக்கிறது. அது ஏன்? சொந்த ஊரில் அவருக்கு ஏதும் அந்த சாதியினால் கஷ்டமா? யாரவது விருதுநகர்காரங்க சொல்லுங்கப்பா. ஆனால் கலைப்படைப்பு என்று பார்க்கும் போது இரண்டுமே பொக்கிஷமான படங்கள் தான்.
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

ஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..

Followers

ஒரு வெளம்பரம்...

My photo

http://www.sivakasikaran.com/
Nothing special about me, except I'm a traditional man which makes people to think me as an alien or from 13th century!!!!!!!!!!!

என் பாரதி சொன்னது போல,

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..

Most Reading

Sidebar One